Posted by superadmin in Latest News
“ இந்த மின்சக்தித் துறையில் பிரச்சினைகள் இருக்கின்றன. படிப்படியாக குறைத்து இந்தப் பிரச்சினைகளுக்கு ஒரு தொழில் அடிப்படையினூடாக தீர்வு காணப்படும்….”
“2020 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதமளவில் ஹபரன உப மின்னிலையத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்படும்…..”
ரவி கருனாநாயக்க
மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர்
“எமக்கு சாட்டப்பட்டுள்ள விடயத்தை சரியாக நானும், இராஜாங்க அமைச்சரும், இ.மி.ச. பொறியியலாளர்களும் ஒன்றிணைந்து பிரச்சினைகள் ஏற்படாத வகையில் முன்னெடுத்து நிறைவேற்றுவோம். எனக்கு புரியவில்லை, இந்த வெளித் தரப்புகளுக்கு எமது விடயம் தொடர்பில் இவ்வளவு பிரச்சினை ஏன் என்பது. பல ஆண்டுகளாக, இந்த மின்சக்தித் துறையில் பிரச்சினைகள் இருந்து வருகின்றன. எனினும், அத்தகைய பிரச்சினைகளை படிப்படியாக குறைத்து, அத்தகைய பிரச்சினைகளுக்கு ஒரு தொழில் அடிப்படையினூடாக தீர்வுகளை வழங்க முடியும் என எங்களால் பொறுப்புடன் கூற முடியும். மின்சாரம் குறைவு, மின்சாரம் இல்லை, மின்சாரப் பற்றாக்குறை என கூறப்படுகின்ற அனைத்தும் பொய். பிரச்சினைகள் இருக்கின்றன. எனினும், நாம் அந்த சவால்களை எதிர்கொண்டு, அச்சமின்றி செயல்படுவோம். எனக்கு புரியவில்லை இந்த வெளித் தரப்புகளுக்கு எமது விடயம் தொடர்பில் இவ்வளவு பிரச்சினை ஏன் என்பது’ என மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர் ரவி கருனாநாயக்க அவர்கள் கூறினார்கள்.
ஹபரனவில் நிர்மாணிக்கப்படும் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான உப மின்னிலையத்தின் நிர்மாணப் பணிகளை பார்வையிடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அவதானிப்பு பயணத்தில் கலந்துகொண்ட வேளையிலேயே அமைச்சர் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்கள். இந்த நிகழ்வில், மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சின் இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச, அமைச்சின் செயலாளர் கலாநிதி பீ.எம்.எஸ். பட்டகொட ஆகியோர் அடங்கலாக இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டனர்.
‘சாம்பூரில் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள 200 மெகாவொட்டு சக்தி உற்பத்திக் கொள்திறனுடைய நிலக்கரி அனல் மின்னுற்பத்தி நிலையக் கருத் திட்டதை அடிப்படையாகக் கொண்டு, இந்த ஹபரன உப மின்னிலையத்தை தாபிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தற்பொழுது நுரைச்சோலையிலிருந்து புதிய அனுராதபுரம் வரைக்கும் அதே நேரம் வேயாங்கொட வரைக்கும் செல்லுகின்ற மின்சார செலுத்துகை மார்க்கங்களில் ஏதாவது ஒரு பிரச்சினை நிலை ஏற்படும் சந்தர்ப்பத்தில், மின்சார முறைமையில் ஏற்படும் பாதகமான நிலையை கட்டுப்படுத்துவதற்காகவும் இந்த உப மின்னிலையத்தை பயன்படுத்த முடியும். 2020 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதமளவில், இந்தக் கருத் திட்டத்தை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஹபரன உப மின்னிலையத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையும் போது, சாம்பூர் அனல் மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகளும் நிறைவடைந்தால், அது மின்சக்தித் துறைக்கு மாத்திரமன்றி முழு நாட்டிற்கும் பொருளாதார நன்மைகளை பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரு உள்நாட்டுக் கம்பனியான டீமோ நிறுவனத்தினால் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த உப மின்னிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்கு செலவாகும் செலவு ஏறக்குறைய 3.5 பில்லியன் ரூபா அளவில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. JICA நிறுவனத்தின் கடன் அடிப்படையில் இந்த உப மின்னிலையம் 16 ஏக்கர் அளவான அரச காணியில் நிர்மாணிக்கப்படும்’ எனவும் அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரவி கருனாநாயக்க அவர்கள்,
‘இது 150 கோடி ரூபா பெறுமதியான ஒரு கருத் திட்டம். 2020 ஆம் ஆண்டில் இந்தக் கருத் திட்டம் நிறைவு செய்யப்படும். இந்த உப மின்னிலையக் கருத் திட்டம் மக்களின் வாழ்க்கைக்கு உதவக் கூடியதும், அதே போன்று, முதலீட்டுத் தரப்புகளுக்கு நல்லதொரு வாய்ப்பை அளிக்கக் கூடியதுமான ஒரு கருத் திட்டமாகும். இலங்கையின் எதிர்காலம் தங்கியிருப்பது இத்தகைய கருத் திட்டத்திலாகும். இது அமைதியாக நாட்டில் நிகழும் ஒரு அபிவிருத்தியாகும்’.
‘எந்த ஒரு நபருக்கும் எனது அமைச்சு தொடர்பில் எந்த ஒரு பிரச்சினையாயினும் சரி அது பற்றி வினவுவதற்கும், விடயங்களை தெரிந்து கொள்வதற்கும் நானும் எனது அமைச்சும் எப்பொழுதும் அத்தகையவர்களுக்கு தாராளமாக அழைப்பு விடுக்கின்றோம். ஊடகங்களின் முன் பொய்யாக நடிக்காமல், வாய்ப்பை வழங்கினால், அத்தகைய வாய்ப்புகளை பயன்படுத்தி தமது பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டால் அது முக்கியத்துவம் அல்லவா… ஒரு அரசியல்வாதி எனும் போது காலையிலிருந்து இரவுபடும் வரை அவருக்கு சேறுபூசுவதுதான் நிகழ்கின்றது’ எனவும் கூறினார்கள்.