Posted by superadmin in Latest News
800 மெகாவொட்டு சக்திக் கொள்திறனுடைய ஒரு சூரிய சக்தி மூல மின்னுற்பத்திக் கருத்திட்டம் மிக விரைவில் பூனகரியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் குறிப்பிட்டார்கள்.
இன்று (06) ஆம் திகதி காலை நேரத்தில் குறித்த கருத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு உத்தேசிக்கப்பட்ட வளாகத்திற்கு கள விஜயத்தை மேற்கொண்ட வேளையிலேயே அமைச்சர் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்கள்.
இந்தக் கருத்திட்டத்திற்கு இணையாக 240 மெகாவொட்டு சக்திக் கொள்திறனுடைய ஒரு சூரிய சக்திக் கருத்திட்டமும் உத்தேச வளாகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்தக் கருத்திட்டத்தினூடாக மாற்றுவழி சக்திகள் தொடர்பில் வெளிநாடுகளுக்கு செல்லும் 03 பில்லியன் ரூபா நிதியை வருடமொன்றுக்கு சேமிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என மேலும் குறிப்பிட்ட அமைச்சர், எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் இந்தக் கருத்திட்டத்திட்டம் தொடர்பில் சர்வதேச ரீதியில் கேள்வி விலை மனுக்கள் அழைக்கப்படும் எனவும் கூறினார்.
மீளப்புதுப்பிக்கத்தகு சக்திகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இந்தக் கருத்திட்டத்தின் மூலம் சுற்றாடலுக்கு குறைந்தளவான பாதிப்புகளே ஏற்படும் எனவும் சுற்றாடலுக்கு இதன் மூலம் காபனீர் ஒட்சைட்டு வெளியிடப்பட மாட்டாது எனவும், ஆகையால் இலங்கையை மின்சக்தியில் சுயபூர்த்தியுடைய ஒரு தேசமாக ஆக்குவதற்கு நகரும் பயணத்தில் இந்த சூரிய மற்றும் காற்று சக்தி மூலக் கருத்திட்டம், இலங்கையின் சக்தி உற்பத்தியை புதியவொரு வழிக்கு இட்டுச்செல்லும் எனவும் அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
இலங்கை மின்சார சபையின் தலைவர் டப்ளியூ.பீ. கனேகல, பொது முகாமையாளர் ஏ.கே. சமரசிங்க ஆகியோர் அடங்கலாக அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.