Posted by superadmin in Latest News
· ஏப்ரல் மாதம் முடிவடைவதற்கு முன்னர் அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு 100% வீத மின்சார வசதிகள் பெற்றுக் கொடுக்கப்படும்.
அம்பாந்தோட்டை பறுத்தக் கந்தை சூரிய சக்திப் பேட்டை வளாகத்திற்கு மேற்கொண்டிருந்த அவதானிப்பு சுற்றுப் பயணத்தின் போது மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கெளரவ ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்கள்.
’மின்சாரப் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக பத்து இலட்சம் வீடுகளுக்கு சூரிய சக்தி மூல மின்சாரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு நாம் தீர்மானித்திருக்கின்றோம். இந்த இடம் தான் இலங்கையின் முதலாவது சூரிய சக்திப் பேட்டை. ஏற்கெனவே இந்தச் சக்திப் பேட்டையின் மூலம் 1.2 மெ.வொ. மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. இதனால் நாட்டின் நிதிகள் வெளிநாடுகளுக்குச் செல்வதையும் தவிர்த்துக் கொள்ள முடியும். இதன் முக்கியத்துவம் யாதெனில் இது சுற்றாடலுக்கு எந்த விதமான பாதிப்புகளும் இன்றி சுற்றாடல் நேயக் கருத்திட்டமாக விளங்குவதாகும். இதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு எந்த விதத்திலும் எமது நாட்டு நிதிகள் வெளிநாடுகளுக்குச் செல்வதில்லை. அந்த வகையிலும் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பிரச்சினையாக இருப்பது யாதெனில் சூரிய ஒளி கிடையாத சந்தர்ப்பங்களில் சூரிய சக்தி உற்பத்தி முறைமையில் சம நிலையைப் பேணுவதாகும். அதற்கும் நவீனத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உரிய தீர்வுகளைக் கண்டு கொள்ள முடியும். சூரிய சக்தி மின்னுற்பத்திக் கருத் திட்டங்களினூடாக எதிர்காலத்தில் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் துறையில் புரட்சிகரமான ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்’ என்பதையும் மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கெளரவ ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.
அம்பாந்தோட்டை பறுக் கந்தை சூரிய சக்திப் பேட்டை வளாகத்திற்கு மேற்கொண்டிருந்த அவதானிப்பு சுற்றுப் பயணத்தில் கலந்து கொண்ட வேளையிலேயே அமைச்சர் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள்…
’நான் இந்த அமைச்சைப் பொறுப்பேற்று இப்பொழுது 06 மாதங்கள் மாத்திரமே. இந்தக் குறுகிய ஒரு காலப் பகுதியினுள் அமைச்சிலுள்ள முக்கியமான சில பிரச்சினைகளை இனங்கண்டு நாம் அவற்றுக்கான தீர்வுகளை விரைவில் பெற்றுக் கொடுத்தோம். இதில் முக்கியமான ஒரு பிரச்சினை தான் இலங்கை மின்சார சபைக்கு இணைக்கப்பட்டு பணியாற்றுகின்ற ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்படாமல் இருப்பது. 02 மாத காலத்திற்குள் பல சவால்களுக்கு மத்தியிலும் கூட அத்தகைய 2500 ஊழியர்களை நாம் பதவியில் நிரந்தமாக்கியுள்ளோம். ஏனைய ஊழியர்களுக்கும் நான் தெளிவாக உறுதியளித்திருந்தேன் அவர்களுக்கும் இந்த யூன் மாதம் முடிவடைவதற்கு முன்னர் அவர்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்து நிரந்தர நியமனங்களை வழங்குவதாக. ஒருவரை ஒருவர் குறை கூறுவதைத் தவிர்த்து அனைவரும் ஒற்றுமையாக ஒன்றிணையும் ஒரு முறையில் தான் நான் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க விரும்புகின்றேன். இவ்வாறான ஒரு நிரந்த வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது நாட்டில் பிரச்சினைகள் மலிந்துள்ள இந்தக் கால கட்டத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தினால் எந்த அளவுக்கு நியாயம் என்பதை மக்களாகிய நீங்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்’ எனவும் குறிப்பிட்டார்கள்.
இந்த நிகழ்வுக்கு இணையாக அம்பாந்தோட்டை மாவட்டத்தின் மின்சார கருமப் பணியின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமும் அமைச்சரின் தலைமையில் அம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. ஏப்ரல் மாதம் முடிவடைவதற்கு முன்னர் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இது வரை காலமும் மின்சார வசதிகளைப் பெற்றிராத அனைத்து நபர்களுக்கும் தேவையான மின்சாரத்தைப் பெற்றுக் கொடுத்து அவர்களின் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வருவோம் எனவும் குறிப்பிட்ட அமைச்சர் அவர்கள் ஒரு நாடு என்ற ரீதியில் ஏதாவது ஒரு சமூகப் பிரிவினரைக் கட்டியெழுப்பும் புனித கருமத்தின் பங்காளிகளாக மாறுமாறும் அரச ஊழியர்களைக் கேட்டுக் கொண்டார்கள்.