Posted by superadmin in Latest News
தேசிய மின்சார முறைமைக்கு 500 மெ.வொ. மின்னுற்பத்திப் பங்களிப்பைப் பெற்றுக் கொடுக்கும் முகமாக சாம்பூர் அனல் மின்னுற்பத்தி நிலையத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளை எதிர்வரும் ஒரு சில மாதங்களுக்குள் விரைவில் ஆரம்பிக்குமாறு மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கெளரவ ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் உரிய பிரிவினர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்கள்.
சாம்பூர் அனல் மின்னுற்பத்தி நிலைய வளாகத்தின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால வேலைத் திட்டங்கள் என்பன பற்றி ஆராய்ந்து பார்ப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அவதானிப்பு சுற்றுப் பயணத்தில் கலந்து கொண்ட போதே அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் இவ்வாறு அறிவுரைகளை வழங்கினார்கள். மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரனி கெளரவ அஜித் பி. பெரேரா அவர்களும், மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் பட்டகொட அவர்களும், இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த அவதானிப்பு சுற்றுப் பயணத்தில் கலந்து கொண்டனர்.
இதன் போது அமைச்சர் அவர்கள் மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான காணியும், அதற்கான பிரவேச வீதியும், மின்னுற்பத்தி நிலையத்தின் தரவுகளும் அடங்கிய ஒரு திட்டத்தைப் பரிசீலித்ததுடன், கருத்திட்டத்துடன் தொடர்புடைய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையையும் நடத்தினார்கள். அதன் பின்னர், பிரதேசவாசிகளுடனும் நல்லிணக்கத்துடன் உரையாடிய அமைச்சர் கெளரவ ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள், விடயத்திற்குப் பொறுப்புடைய அமைச்சர் என்ற வகையில் தான் எப்பொழுதும் முயற்சிப்பது மின்சார நுகர்வோருக்கு குறைந்த விலையில், குறைந்தளவான சுற்றாடல் பாதிப்புகளுடன் தொடர்ச்சியாக, தரமான மின்சார விநியோகத்தை வழங்குவதற்காகும் எனவும் குறிப்பிட்டார்கள். அதே போன்று தேசிய கருமப் பணி ஒன்றாக மேற்கொள்ளப்படுகின்ற இந்த மின்னுற்பத்தி நிலைய நிர்மாணப் பணிகளின் போதும் மக்களின் ஒத்துழைப்பை அதிகளவில் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்கள்.
500 ஏக்கர் அளவான காணியைப் பயன்படுத்தி நிர்மாணிக்கப்படுகின்ற இந்த சாம்பூர் அனல் மின்னுற்பத்திக் கருத்திட்டத்திற்கு ஏறக்குறைய 600 மில்லியன் ரூபா அளவில் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அனல் மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கு அரச நிறுவனங்கள், சுற்றாடல் அமைப்புகள் மற்றும் பிரதேசவாசிகள் போன்ற சகல தரப்புகளினதும் அனுமதியையும், அங்கீகாரத்தையும் மற்றும் ஒத்துழைப்பையும் பெற்று, குறித்த மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கு அவசியமான ஒப்பந்தமும் மற்றும் சட்டமுறையான விடயங்களும் நிறைவு செய்யப்பட்டுள்ளன எனவும், மின்னுற்பத்தி நிலையத்திற்கான சுற்றாடல் அங்கீகாரமும் இந்த ஆண்டு பெப்ருவரி மாதம் 02 ஆம் திகதி கிடைத்ததால், எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய மின்சார நெருக்கடிக்கு நிரந்தரமான ஒரு தீர்வாக, எதிர்வரும் ஒரு சில மாதங்களுக்குள் சாம்பூர் அனல் மின்னுற்பத்தி நிலையத்தினது முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் கெளரவ அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள். அதே போன்று நிர்மாணப் பணிகளை வெகு விரைவில் நிறைவு செய்து, மின்னுற்பத்தி நடவடிக்கைகளையும் விரைவில் ஆரம்பிப்பதற்கு தான் எதிர்பார்ப்பதாகவும், நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்பு சுற்றுப் பயணித்தின் போது மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கெளரவ ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் உறுதியளித்தார்கள்