Posted by superadmin in Latest News
● நாம் இன்று 98% வீதமான மக்களுக்கு மின்சார வசதிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். அதே போன்று எதிர்வருகின்ற சில மாதங்களில் முழு நாட்டிற்கும் மின்சார ஒளியை வழங்குவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாளாந்தம் மின்சாரத்திற்காக அதிகரித்து வருகின்ற தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்களின் பால் நகர்வதை போல் மின்சாரத்தைப் பாதுகாத்து சேமிப்பதும் முக்கியமானதாகும். நிறுவன மட்டத்தில் மினசாரத்தைப் பாதுகாத்து சேமிக்கும் பொருட்டு, எதிர்காலத்தில் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மின்சக்தி முகாமையாளர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
கடந்த தினத்தில் இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபையில் மேற்கொள்ளப்பட்ட சுற்று விஜயத்தின் போது அமைச்சர் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள். இதன் போது, இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபையின் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர் சியம்பலாபிட்டிய அவர்கள், எதிர்காலத்தில் செயற்படுத்தும் பொருட்டு திட்டமிடப்பட்டுள்ள கருத்திட்டங்கள் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகளையும் வழங்கினார்கள்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சியம்பலாபிட்டிய அவர்கள்…
‘மின்சாரத்திற்காக அதிகரித்து வருகின்ற தேவைக்கு ஏற்ற ஒரு திட்டத்திற்காக புதிதாக மின்னுற்பத்தி நிலையங்களைத் தாபிப்பது போல், உற்பத்தி செய்யப்படுகின்ற மின்சாரத்தை செலுத்துகின்ற போதும், பகிர்ந்தளிக்கின்ற போதும், அதே போன்று மின்சாரத்தை நுகர்கின்ற போதும் அந்த மின்சாரத்தைப் பாகாத்து சேமிக்க வேண்டும். அதற்காக மக்களை விழிப்பூட்டுவதற்கும் மற்றும் ஊக்குவிப்பதற்குமான ஒரு செயல் திட்டத்தைப் பின்பற்ற வேண்டும். ஏற்கனவே ஆசியாவில் 24 மணித்தியாலமும் தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்கும் ஒரேயொரு நாடாக இலங்கை மாறியுள்ளது. எதிர்காலத்தில் முழு நாட்டிற்கும் தொடர்ச்சியாக தரமான மின்சாரத்தை குறைந்த விலையில் விநியோகிக்கும் ஒரு நாடாக இலங்கையை மாற்ற வேண்டுமானால் மின்சாரத்தைப் பாதுகாத்து சேமிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ எனக் குறிப்பிட்டார்கள்.
இந்த நிகழ்வில் மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா, இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபையின் தலைவர் ஆகியோர் அடங்கலாக பல அலுவலர்களும் கலந்து கொண்டனர்.