Posted by superadmin in Latest News
நாட்டினது மின்சார உற்பத்தி அளவை மேலும் அதிகரிக்கும் நோக்கில் புத்தளம் நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி நிலையம் பாரியளவான ஒரு பங்களிப்பை நல்கி வருவதால், இந்த மின்னுற்பத்தி நிலையத்திற்கு தொடர்ச்சியாக நிலக்கரியை விநியோகிக்க வேண்டியது அவசியமாகும். ஆகையால், உலகத்தில் அதிகளவு நிலக்கரியை உற்பத்தி செய்கின்ற ஒரு நாடான தென் ஆபிரிக்காவுடன் அந்த நாட்டிலிருந்து நிலக்கரியை இறக்குமதி செய்வது தொடர்பான ஒரு பேச்சுவார்த்தை கடந்த நாட்களின் போது மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சில் நடைபெற்றது.
இந்நாட்டு மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்களுக்கும் தென் ஆபிரிக்காவின் உயர் ஸ்தானிகர் ஜி.கிவ்.எம். டொய்ட் (South African High Commissioner Mr. G. Q. M. Doidge) அவர்களுக்கும் இடையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின் அடிப்படை நோக்கமாக அமைந்தது யாதெனில், நிலக்கரியை இறக்குமதி செய்வது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதாகும். இங்கு கருத்துத் தெரிவித்த போது மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் ‘தென் ஆபிரிக்க அரசாங்கத்தின் மூலம் எமது நாட்டிற்கு நிலக்கரியை விநியோகிப்பதற்கு அதன் விருப்பத்தைத் தெரிவித்தமையானது இலங்கைக்கு மிகவும் நன்மை அளிக்கக் கூடியதாக இருப்பதால், அது தொடர்பில் மேலும் பேச்சுவார்த்தைகளை நடத்தி, மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களுக்கும், அவரது அரசாங்கத்தின் அமைச்சரவைக்கும் இது பற்றி அறிவிப்பதற்கு தான் எதிர்பார்ப்பதாகவும்’ குறிப்பிட்டார்.
2016 ஆம் ஆண்டின் முதல் மாதம் அளவில் இலங்கையின் மின்சாரத் தேவையை 100% பூர்த்தி செய்வதற்கு தான் உத்தேசித்துள்ளதாகவும், நாளாந்தம் அதிகரித்து வருகின்ற மின்சாரத்திற்கான தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, பாரம்பரிய சக்தி வள மூலங்களுக்குப் பதிலாக, விலை குறைந்த மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்களின் பால் நகர்ந்து, மின்சாரத்தைப் பாதுகாத்து சேமிக்கும் நடவடிக்கையில் தான் இறங்கியுள்ளதாகவும் குறிப்பிட்ட அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள், பூகோள வெப்பநிலை அதிகரித்து அதனால் ஏற்படுகின்ற காலநிலை மாற்றங்களுக்கும் அந்த நடவடிக்கையின் மூலம் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
அதே போன்று, இரண்டு நாடுகளுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வருகின்ற இரு தரப்பு இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தி, தென் ஆபிரிக்காவில் மின்சார நெருக்கடிக்கு ஒரு தீர்வாக மாற்றுவழி சக்தி வளங்களின் பாவனையை வியாபிக்கச் செய்வதற்கு, இலங்கை அரசாங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருக்கின்றது எனவும், அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் மேலும் தெரிவித்தார்கள்.