Posted by superadmin in Latest News
● விண்ணப்பப்படிவங்களை பிராந்திய மின் பொறியியலாளர் அலுவலகத்திலிருந்தும் இ.மி.ச. வாடிக்கையாளர் சேவை நிலையங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்
● பதிவுசெய்யப்பட்ட பின்னர் ஆகக்குறைந்த நாட்களுக்குள் புதிய மின்சார இணைப்பு கிடைக்கும்
2015 ஆம் ஆண்டு முடிவடையும் போது முழு இலங்கையும் உள்ளடங்கும் வகையில் மின்சாரத்தை வழங்கும் அரசாங்கத்தினது குறிக்கோளின் கீழ், மின்வலு சக்தி அமைச்சின் மூலம் செயற்படுத்தப்பட்ட சலுகை அடிப்படையில் மின்சாரத்தை வழங்கும் ‘முழு நாட்டிற்கும் ஒளி – இருள் நீங்கிவிடும்’ என்ற தலைப்பில் தேசிய மின்சாரத் தேவையின் முதல் கட்டம் ஏற்கெனவே செயற்படுத்தப்பட்டுள்ளது.
மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கெளரவ ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்களது அறிவுரைகளின் பிரகாரம், புதிய மின்சார இணைப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான விண்ணப்பப்படிவங்களை விநியோகிக்கும் பணி இலங்கை மின்சார சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுதிலுமுள்ள இலங்கை மின்சார சபையின் பிராந்திய மின் பொறியியலாளர் அலுவலகங்கள் மற்றும் மின்சார சபையின் வாடிக்கையாளர் சேவை நிலையங்கள் ஆகியவற்றிலிருந்து உரிய விண்ணப்பப்படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த விண்ணப்பப்படிவத்தை உரிய முறையில் பூரணப்படுத்தி தேவையான ஆவணங்களுடன் அந்தந்தப் பிராந்திய அலுவலகங்களுக்கு ஒப்படைப்பதன் மூலம் இந்த மின்சார சலுகைக் கடன் திட்டத்தில் பதிவுசெய்துகொள்ளலாம் எனவும், அவ்வாறு பதிவுசெய்யப்பட்டதன் பின்னர் ஆகக்குறைந்த நாட்களில் மின்சார இணைப்பை வழங்குவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதன் பிரகாரம் இது வரை மின்சார வசதிகள் கிடைக்காத மக்களுக்கு தமது பிரதேசத்தின் பிராந்திய மின் பொறியியலாளர் அலுவலகங்களிலிருந்து அல்லது இலங்கை மின்சார சபையின் வாடிக்கையாளர் சேவை நிலையங்களிலிருந்து புதிய மின்சார இணைப்புகளை வழங்குவது தொடர்பில் விநியோகிக்கப்படுகின்ற மின்சார சலுகைக் கடன் திட்டத்திலிருந்து விண்ணப்பப்படிவங்களைப் பெற்றுக்கொண்டு, விரைவில் புதிய மின்சார இணைப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கு தம்மைப் பதிவுசெய்துகொள்ளுமாறு மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சு நாட்டிலுள்ள முழு மக்களையும் கேட்டுக்கொள்கின்றது.