Posted by in Latest News
5000 இற்கும் அதிகமான இ.மி.ச. தற்காலிக ஊழியர்கள் விரைவில் நிரந்தர சேவையில் உள்ளீர்க்கப்படவுள்ளதாக மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் குறிப்பிட்டார். கேகாலை தபால் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ‘முழு நாட்டிற்கும் ஒளி…. இருள் நீங்கும்….. என்ற தேசிய மின்சாரக் குறிக்கோள் அடிப்படையிலான நடமாடும் சேவையில் கலந்து கொண்ட நேரத்திலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சியம்பலாப்பிட்டிய…….
‘மனிவலுவை வழங்கும் ஏறக்குறைய 5800 ஊழியர்கள் இலங்கை மின்சார சபையில் பணியாற்றுகின்றனர். இந்த ஊழியர்கள் பற்றி மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தி அவரின் தலைமையிலும் மற்றும் அவரின் விகாட்டலிலும் அதற்கு அவசியமான விஷேட வேலைத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. அதில் முதலாவதாக அமைய அடிப்படையில் பணியாற்றுகின்ற ஊழியர்களுக்கு நிரந்த நியமனங்களை வழங்குவதற்கும், இரண்டாவதாக அமைய அடிப்படையில் சேவைக்கு வருவதற்கான தகைமைகள் உடைய ஊழியர்களை அமைய அடிப்படையில் ஆட்சேர்த்துக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தவிர, அடிப்படைத் தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள ஏழு, எட்டு வருடங்களுக்கு அதிக காலம் பணியாற்றிய ஊழியர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கும் நியாயம் கிடைக்கும் வகையிலும் இலங்கை மின்சார சபையின் புலமைச் சொத்துக்கள் பாதுகாக்கப்படும் வகையிலும் குறுங்கால, நடுத்தர கால மற்றும் நீண்டகால வேலைத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும்.
இன்று, எமது நாட்டில் மின்சாரத்திற்கான தேவையில் 97% வீதத்திற்கும் அதிகளவு தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. 30 ஆண்டுகள் யுத்தம் நிலவிய இந்த நாட்டில் இவ்வாறு 97% வீதம் மின்சாரத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்றால் அது ஒரு பெரும் சவாலை வெற்றிகொண்ட சாதனையாகும். குறிப்பாக ஆபிரிக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது எமது நாடு அந்த நாடுகளை விடவும் மிகவும் முன்னிலையில் காணப்படுகின்றது. ஆயினும் எமக்கு இன்னும் 03% வீதமான அளவில் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. எமது முயற்சியும் இந்த 03% வீத மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதாகவே இருக்கின்றது.
கேகாலை மாவட்டத்தில் மின்சார வசதிகள் கிடைக்காமல் ஏறக்குறைய 8158 குடும்பங்கள் காணப்படுகின்றன. இந்தக் குடும்பங்களில் ஏறக்குறைய 20,000 பாடசாலை செல்லும் மாணவர்கள் இருக்கின்றனர். இந்தக் குடும்பங்களிலுள்ள இந்தப் பிள்ளைகளுக்கு மின்சார ஒளியில் கற்பதற்கு ஆசை இல்லையா. அதனால் தான் நாங்கள் இந்த வேலைத் திட்டத்திற்கு தேசிய மின்சாரக் குறிக்கோள் என்ற பெயரை வைத்தோம். இது தொடர்பில் எமக்கு ஒரு இலக்கு இருக்கின்றது. இந்த ஆண்டு திசம்பர் மாதம் 04 ஆம் திகதி அளவில் மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பொலன்னறுவை மாவட்ட மக்களுக்கு மின்சாரத்தைக் கொண்டு அவர்களை திருப்படுத்தவுள்ளார். அடுத்த ஆண்டு சனவரி மாதம் அளவில் நாட்டில் மின்சார வசதிகள் அற்றிருக்கின்ற மக்களுக்கு மின்சாரம் வழங்கப்படும்’ எனவும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வின் போது முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் ஸ்ரீ லங்கா சுதந்திக் கட்சியின் கேகாலை மாவட்டத் தலைவர் அத்தாவுத செனவிரத்ன, கைத்தொழில் விவகாரங்கள் பற்றிய இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச, இந்த அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட, இலங்கை மின்சார சபையின் தலைவர் அடங்கலாக சிரேஷ்ட அதிகாரிகள், கேகாலை மாவட்டத்தின் செயலாளர் உள்ளிட்ட மேலும் அரசாங்க அலுவலர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.