2020 ஆம் ஆண்டளவில் இலங்கையை மின்சாரத்தில் சுயதேவைப் பூர்த்தி அடையச் செய்ய வேண்டும்
10 0

Posted by  in Latest News

அதற்கு நாம் மின்சாரம் வீணாதலைக் குறைக்க வேண்டும்.
வினைத் திறன் வாய்ந்த பாவனையின் ஊடாக மின்சாரத்திற்கான கேள்வியை 2‍% வீதத்தால் குறைத்துக் கொள்ள முடியும்.

‘ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் எமக்கு பல பொறுப்புப் பணிகளை நிறைவேற்ற வேண்டி இருக்கின்றது. நாட்டின் முக்கியமான பிரிவாகிய மின்சாரத் துறையை அபிவிருத்தி செய்யாமல் ஒரு நாட்டை ஒருபோதும் அபிவிருத்தி செய்ய முடியாது. 2025 ஆம் ஆண்டு வரை மின்சாரத் துறையில் மேற்கொள்ள வேண்டிய பொறுப்புப் பணிகள் சார்ந்த திட்டங்கள் அனைத்தும் வகுத்தமைக்கப்பட்டு ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ளன. தற்பொழுது எஞ்சியிருப்பது அந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது மாத்திரமாகும். ஏற்கெனவே இலங்கையின் மின்சாரத் தேவை 98‍% வீதமான அளவுக்கு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. மிகவும் விரைவில் மின்சாரத் தேவையை 100‍% வீதம் பூர்த்தி செய்வதற்கு அவசியமான ஒழுங்குகளை நாம் மேற்கொள்வோம். அதே போன்று 2020 ஆம் ஆண்டளவில் இலங்கை முழுவதையும் மின்சாரத்தில் சுயதேவைப் பூர்த்தி அடையச் செய்வதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயல்படுவோம்’ என மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் தமது பதவியில் பணிகளை ஆரம்பிக்கும் வைபவத்தில் கலந்து கொண்ட போது தெரிவித்தார்.

மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்கு சக்தி வளங்கள் அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது இடம்பெற்ற சர்வ மத ஆசிர்வாத செயற்பாடுகளை அடுத்து அமைச்சர் தனது பதவியில் கடமைப் பணிகளை ஆரம்பித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் ……………………… ‘இதற்கு முன்னர் அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றால், முதல் முலாகக் கைக்குக் கிடைப்பது ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளித்த ஊழியர்களினது இடமாற்றப் பட்டியலாகும். ஆயினும், இன்று அந்த யுகத்திற்கு முற்றிப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. இன்று எனக்கு முதலில் கிடைத்தது 2025 ஆம் ஆண்டு வரை மின்சாரத் துறையில் என்ன செய்ய வேண்டும் என்ற பணிகள் அடங்கிய ஒரு அறிக்கையாகும். அது தொடர்பில் முன்னாள் மின்வலு சக்தி அமைச்சருக்கும் மற்றும் மின்வலு சக்தி இராஜாங்க அமைச்சருக்கும் நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். இன்று கட்சி பேதங்களையும் மற்றும் அரசியல் இலாபங்களையும் மறந்து, நல்லாட்சியில் உருவான கூட்டிணைந்த ஒரு அரசியல் சட்டகத்தின் ஊடாக நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார்கள். இந்த நிலை இன்னும் கிராமங்களுக்குப் பரிட்சயமில்லை. கிராமங்களுக்கும் இந்த நல்லாட்சி என்ற கொள்கையைக் கொண்டு சென்று புகுத்த வேண்டும்’ எனவும்,

‘நாட்டின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு எமக்கு மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்களின் பால் நகர வேண்டிய காலம் இன்று பிறந்துள்ளது. 2020 ஆம் ஆண்டளவில் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தியின் பங்களிப்பை 60‍% வீதத்தால் அதிகரிக்க வேண்டும். அதே போன்று மின்சாரம் பயனின்றி வீணாகுவதைக் குறைப்பதற்கு இயன்றளவு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். 2015 ஆம் ஆண்டில் தற்பொழுது 11‍% வீதமாகக் காணப்படுகின்ற மின்சார வீணாதலை 2020 ஆம் ஆண்டளவில் 8‍% வீதம் வரை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக இந்த மின்சாரம் வீணாகுவதைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம் மின்சாரத்திற்கான தேவையை 2‍% வீதத்தால் குறைத்துக் கொள்ள முடியும்’ எனவும்,

‘இலங்கை மின்சார சபையில் இன்று சுமார் 20,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அமைச்சின் செயலாளர் தொட்டு தொலைவிலுள்ள கிராமங்களில் காணப்படும் மின் கம்பங்களில் ஏறி, மின்சாரத்தை வழங்க சேவையாற்றும் தொழிலாளர் வரை நாட்டின் மின்சார விநியோகத்திற்காக இவர்கள் பாரிய ஒரு பங்களிப்பைச் செய்கின்றனர். மின்சார நுகர்வோருக்கு வினைத் திறன் வாய்ந்த தரமான மின்சார சேவையை இடையறாது வழங்குவதற்கு திடகாத்திரத்துடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றுவதற்கு உங்கள் அனவைரதும் ஒத்துழைப்பை நான் எதிர்பார்க்கின்றேன்’ எனவும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா, முன்னாள் அமைச்சர் அத்தாவுத செனவிரட்ன, பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் டிலான் பெரேரா ஆகிய அமைச்சர்களும், மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் பட்டகொட உள்ளிட்ட மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சின் இணை நிறுவனங்களினது சிரேஷ்ட அதிகாரிகளும் மற்றும் நல்லாசிகள் செய்வோரும் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a comment

* required