உறுதியளித்த 40 பில்லியன் ரூபாவைப் பார்க்கிலும் 65.5 பில்லியன் எரிபொருள் சலுகைகள் வழங்கப்பட்டன
22 0

Posted by  in Latest News

எரிபொருள், மின்சாரம், எரிவாயு என்பவற்றுக்கு முறையான ஒரு விலைச் சூத்திரம் – அனைத்து வகையான சலுகைகளும் பொது மக்களுக்கே

2015.01.21 ஆம் திகதி நள்ளிரவு முதல் செயல்வலுப் பெறும் வகையில் எரிபொருட்களின் விலைகளைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது என மின்வலு சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் அமைச்சரவைத் தீர்மானத்தை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பாட்டலி சம்பிக்க ரணவக்க,

‘உலகச் சந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ள நேரத்தில், துரிதமான ஒரு தீர்வாக, எரிபொருட்களிலிருந்து அரசாங்கம் அறவிடும் 40 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வரியை நீக்கி, அந்தச் சலுகைகளை பொது மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பதாக மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் ‘மைத்திரி யுகம் – நிலையான ஓர் நாடு’ என்ற கொள்கைப் பிரகடனத்தின் மூலம் நாம் உறுதியளித்திருந்தோம். ஆயினும், நாம் இன்று 65 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான ஒரு சலுகையை இந்த எரிபொருட்களின் விலைகள் குறைப்பினால் பொது மக்களுக்குப் பெற்றுக்கொடுத்துள்ளோம்’ எனவும்,

‘2015.01.21 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் செயல்வலுப் பெறும் வகையில் எரிபொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்தோம். அதன் பிரகாம் ஒரு லீற்றர் 92 ஒக்டன் பெற்றோலின் விலையை தற்பொழுது 150.00 ரூபாவிலிருந்து 117.00 ரூபா வரையும், ஒரு லீற்றர் ஒக்டன் 95 பெற்றோலின் விலையை 158.00 ரூபாவிலிருந்து 126.00 ரூபா வரையும், ஒரு லீற்றர் லங்கா ஒட்டோ டீசலின் முன்பிருந்த 111.00 ரூபா விலையை 95.00 ரூபா வரையும், ஒரு லீற்றர் சுப்பர் டீசலின் முன்பிருந்த 133.00 ரூபா விலையை 110.00 ரூபா வரையும், ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்யின் முன்பிருந்த 81.00 ரூபா விலையை 65.00 ரூபா வரையும், கைத்தொழில்களின் நிமித்தம் பயன்படுத்தப்படும் ஒரு லீற்றர் எரிபொருளின் முன்பிருந்த 110.00 ரூபா விலையை 94.00 ரூபா வரையும் குறைத்துள்ளோம்’ எனவும்,

‘இதன் பிரகாரம் அண்ணளவாக இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கும் நிதி அமைச்சுக்கும் கிடைக்கவிருந்த 65.5 பில்லியன் ரூபா நிதி இழக்கப்பட்டது. இந்த எரிபொருள் விலைச் சலுகையினூடாக போக்குவரத்திலும் அதே போன்று பொருட்களின் விலைகளிலும் ஒரு சலுகை கிடைக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம்’ எனவும்,

‘நாம் எதிர்காலத்தில் எரிபொருட்களுக்கு தெளிவான வெளிப்படையான ஒரு விலைச் சூத்திரத்தைத் தயாரித்து அறிமுகப்படுத்தவுள்ளோம். அதே போன்று எதிர்வரும் யூலை மாதத்திலிருந்து மின்சாரத்திற்கு புதிய விலை முறையை அறிமுகப்படுத்துவோம். இதன் போது வறிய மக்கள் தொடர்பில் விஷேட கவனத்தைச் செலுத்தி செயல்படுவதற்கும் எதிர்பார்க்கின்றோம்’ எனவும்,

‘கடந்த காலத்தில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருட்களைக் கொள்வனவு செய்யாதிருந்து, தற்பொழுது எரிபொருள் பற்றாக்குறையொன்று இருப்பதாகக் கூறி நாடகம் ஆடுகின்றனர். அதே போன்று, இன்று சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருட்கள் வழங்கப்படுவதில்லை எனவும் தெரிய வருகின்றது. மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள், பிரதமர், நிதி அமைச்சர் ஆகியோர் உள்ளிட்ட இந்தப் புதிய அமைச்சின் மூலம் வழங்கப்பட்ட இந்த எரிபொருள் விலைச் சலுகையை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்குமாறு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களிடம் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.’ எனவும் தெரிவித்தார்.

Leave a comment

* required